தேனி அல்லிநகரத்தில் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சேலத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கைதான சார்பதிவாளருக்கு சொந்தமான தேனி அல்லிநகரத்தில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சேலத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்ச பணத்துடன் கைதான சார்பதிவாளருக்கு சொந்தமான தேனி அல்லிநகரத்தில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சார்பதிவாளர் கைது
சேலம் உடையார்பட்டியில் ஒருங்கிணைந்த கிழக்கு பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு தாதகாப்பட்டி சார்பதிவாளராக செல்வபாண்டியன் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அவர் தனது அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியபோது, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும், களவுமாக பிடிபட்டார். சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான செல்வபாண்டியன் தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர். அவருடைய வீடு அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ளது. இந்தநிலையில், அந்த வீட்டுக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சூர்யகலா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை வந்தனர்.
5 மணி நேரம் சோதனை
அப்போது அவர்கள், செல்வபாண்டியனின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் நடந்தது. அப்போது, வீட்டில் இருந்த பணம், நகை போன்றவற்றுக்கான கணக்கு விவரங்களை குடும்பத்தினரிடம் போலீசார் கேட்டறிந்தனர்.
மேலும், செல்வபாண்டியன் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் வங்கிக்கணக்கு விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அதற்கான ஆவணங்களை பார்வையிட்டனர். இந்த சோதனையின் போது ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது. சோதனையை தொடர்ந்து போலீசார் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.