தஞ்சை மாவட்டத்தில் 2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
தஞ்சை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு மற்றும் வணிகவரித்துறைக்கு சொந்தமான பறக்கும்படை வாகனம் என2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.52 ஆயிரத்து 430 சிக்கியது.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு மற்றும் வணிகவரித்துறைக்கு சொந்தமான பறக்கும்படை வாகனம் என2 இடங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.52 ஆயிரத்து 430 சிக்கியது.
லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அரசு அலுவலகங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் 2 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.தஞ்சை விமான நிலயம் அருகே உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ தலைமையில் மாவட்ட கண்காணிப்புக்குழு அலுவலர் முத்துவடிவேல் மற்றும் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
கணக்கில் வராத பணம் சிக்கியது
மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7.30 மணி வரைநீடித்தது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேமிப்பு கிடங்கில் இறக்குவதற்காக வரும் லாரி டிரைவர்களிடம் இருந்து பணம் லஞ்சமாக பெறப்படுவதாக வந்த புகார்களின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த சோதனையின் போது அங்கு கணக்கில் வராத ரூ.34 ஆயிரத்து 800 சிக்கியது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறக்கும்படை வாகனம்
இதேபோல, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருபுவனம் அருகே உள்ள விராலிமலை என்ற இடத்தில் வணிகவரித் துறையின் பறக்கும் படை நடமாடும் வாகனத்தை மறித்து தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில், கண்காணிப்புக் குழு ஆய்வாளர் சதீஷ் மற்றும் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.இந்த சோதனையும் மாலை 3 மணியில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.17 ஆயிரத்து 630 சிக்கியது. 2 இடங்களிலும் நடந்த சோதனையில் ரூ.52 ஆயிரத்து 430 சிக்கியது குறிப்பிடத்தக்கது. இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.