விக்னேஷ் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
விக்னேஷ் கொலை வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை,
பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்தனர். அன்று இரவே விக்னேஷ் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக, சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விக்னேஷை காவல் நிலையத்தில் போலீசார், கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமைச் செயலக காலனி காவல் நிலைய, காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாஃப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை காவலர் ஜெகஜீவன், ஆயுதப்படை காவலர் சந்திரகுமார் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து விக்னேஷ் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரிக்காததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் உறவினர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சிவஞானம் முன்பு வந்தது. அப்போது, விசாரணை முறையாக, பாரபட்சமற்ற முறையில் நடைபெற்று வருவதாகவும், 84 சாட்சிகளிடம் விசாரித்து 15 கண்காணிப்பு கேமரா பதிவுகள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது என சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நீதிபதி சிவஞானம், சிபிசிஐடி பாரபட்சமான முறையில் விசாரணை நடத்துவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை. விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.