குண்டலபுலியூர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட23 பேர் கடலூர் மனநல காப்பகங்களில் தங்க வைப்பு


குண்டலபுலியூர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட23 பேர் கடலூர் மனநல காப்பகங்களில் தங்க வைப்பு
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குண்டலபுலியூர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 23 பேர் கடலூர் மனநல காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனா்.

கடலூர்


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்களில் திருப்பூரை சேர்ந்த ஜாபருல்லா மாயமானார். இது பற்றிய புகாரின் பேரில், கோர்ட்டு உத்தரவுபடி வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், உரிய அனுமதியின்றி ஆசிரமம் இயங்கியதும், அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை, சித்ரவதை செய்ததும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரமத்தை நிர்வகித்து வந்த ஜூபின்பேபி உள்பட 9 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட 143 பேருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் சிகிச்சை முடிந்தவர்கள் பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சிகிச்சை முடிந்த 30 வயதுக்கு மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டிருந்த 23 பேர் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களில் 13 பேர் கடலூர் வன்னியர் பாளையத்தில் அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் ஓயாசிஸ் கருணா மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் 10 பேர் ஆல்பேட்டையில் உள்ள ஓயாசிஸ் டாக்டர் கே.வி.தவராஜ் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மனநல காப்பக நிர்வாகியிடம், உரிய அடையாள அட்டை இன்றி யாரேனும் வந்தால் அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதிக்கக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி சென்றனர்.


Next Story