விக்கிரவாண்டியில் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு மாதிரி முகாம் கலெக்டர் பழனி ஆய்வு


விக்கிரவாண்டியில் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு மாதிரி முகாம் கலெக்டர் பழனி ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு மாதிரி முகாமை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் நாளை(திங்கட்கிழமை) முதல் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு மாதிரி முகாம் விக்கிரவாண்டியில் பேரூராட்சி அலுவலகம், பாப்பனப்பட்டு ஊராட்சி, சாமியாடி குச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த முகாமை மாவட்ட கலெக்டா் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விண்ணப்பங்கள் பதிவு செய்யும்போது, பயோமெட்ரிக் முறையில் குடும்ப தலைவிகளின் கைரேகை பதிவு செய்தவுடன், விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான உள்ளீடுகள் விரைந்து நடைபெறுகிறதா என ஆய்வு செய்தார்.

வங்கி கணக்கு செயல்பாட்டில் உள்ளதா?

மேலும் விண்ணப்ப பதிவின்போது குடும்ப தலைவிகளின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற தகவல்களை உள்ளீடு செய்யும்போது, சரியாக பதிவு செய்திடவும், வங்கி கணக்கு தற்போது செயல்பாட்டில் உள்ளதா? என உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவரிடம் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வங்கி கணக்கை புதுப்பித்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், செயல் அலுவலர் அண்ணாதுரை, தேர்தல் துணை தாசில்தார் ஜோதிப்பிரியா, வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், மெகருன்னிஷா, இல்லம் தேடி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழழகன், கமலக்கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீதர், ஜெயபிரகாஷ், அபிராமி, துப்புரவு ஆய்வாளர் ராஜா, மேற்பார்வையாளர் ராமலிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story