தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள்- உதயநிதி ஸ்டாலின் மரியாதை
பசும்பொன்னில் தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜையையொட்டி முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
கமுதி,
பசும்பொன்னில் தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜையையொட்டி முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
சிறப்பு யாகசாலை பூஜை
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வதுகுரு பூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில், பழனி, சத்தியமூர்த்தி, தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் குரு பூஜை விழா சிறப்பு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
பின்னர் 8.45 மணி அளவில் தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ்,
நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தமிழரசி, செ.முருகேசன், ராம.கருமாணிக்கம், டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் அமைச்சர்கள் சு.ப. தங்கவேலன், சத்தியமூர்த்தி, முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், தி.மு.க. இலக்கிய அணி மாநில செயலாளர் பெருநாழி போஸ், சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேங்கைமாரன், கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணை தலைவர் சித்திராதேவிஅய்யனார், மாவட்ட கவுன்சிலர்கள் (வடக்கு) வாசுதேவன், (தெற்கு) போஸ் சசிக்குமார், ஊரக வளர்ச்சி கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், செய்தி மக்கள் தொடர் அலுவலர் பாண்டி உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
தேவரின் புகழ் ஜொலிக்கிறது
பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவிற்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுதோறும் நேரில் வந்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் முதல்-அமைச்சர் வருவதாக இருந்தது.
உடல்நலன் குறைவால் கலந்துகொள்ள முடியவில்லை. அவரது ஆணையின்படி தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினோம்.
பேரறிஞர் அண்ணா, தேவரை பற்றி கூறும்போது, "மண்ணுக்குள் புதைந்திருந்த மாணிக்கம் வெளியே வந்து ஜொலித்ததுபோல் தேவரின் புகழ் ஜொலித்து கொண்டிருக்கிறது" என்றார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வு மேம்பட போராடி வெற்றிபெற்றவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று மாலை 4.30 மணி அளவில் வந்து மலர் தூவி, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.
முன்னதாக காலை 10 மணி அளவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், காமராஜ், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், முன்னாள் எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மண்டபம் ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன், கமுதி ஒன்றிய செயலாளர் எஸ்.பி.காளிமுத்து, ஒன்றிய அவைத்தலைவர் சேகரன், கூட்டுறவு சங்க தலைவர் கருப்பசாமி பாண்டியன், துணை தலைவர் கனகராஜ், புதூர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறும்போது, "அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் வந்து, அ.தி.மு.க. சார்பில் பசும்பொன் தேவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளோம்" என்றார்.