உறுதியற்ற கட்டிடத்தால் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வருவதற்கு அஞ்சும் மக்கள்உடனடியாக சீரமைக்க வலியுறுத்தல்
உறுதியற்ற கட்டிடத்தால் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வருவதற்கு கிராம மக்கள் அஞ்சுகிறார்கள். மேலும் அந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்னர்.
பிரம்மதேசம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது சிறுவாடி கிராமம். இந்த ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறுவாடி, முருக்கேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இதற்கான கட்டிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். கட்டிடத்தில் சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், அதன் உறுதித்தன்மையை இழந்து வருகிறது.
குறிப்பாக மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் முதல் ஊழியர்கள் அனைவரும் அச்சத்துடன் உள்ளார்கள்.
மக்கள் அச்சம்
அதேவேளையில் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களும் ஒரு வித அச்சத்துடனே கட்டிடத்துக்குள் வந்து செல்ல நேரிடுகிறது. மழைக்காலங்களில் நிலைமை மேலும் மோசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் கிராமங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இங்கு வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் கட்டிடமும் அதன் உறுதித்தன்மையை நாளுக்கு நாள் இழந்து வருவது, விபரீதத்துக்கு வழிகுத்துவிடமோ என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
நடவடிக்கை தேவை
எனவே இங்குள்ள ஆவணங்களை பாதுகாப்புடன், கூடவே அங்கு பணிபுரியும் அலுவலர்கள், தங்களது தேவைக்காக அலுவலகத்தை நாடி வரும் மக்களையும் காக்கும் விதமாக, கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே வருமுன் காப்போம் என்ற சொல்லிற்கு ஏற்ப, தற்போதே விழித்துக்கொண்டு மக்களின் அச்சத்தை போக்க கட்டிடத்தை சீரமைத்திட முன்வர நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.