சிதம்பரம் அருகே விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
சிதம்பரம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள தோப்பிருப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 38), விவசாயி. இவர் தனது தந்தை தானசெட்டில்மெண்ட் கொடுத்த நிலத்திற்கான பட்டாவிற்கு பெயர் மாற்றம் செய்ய, கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை (40) அணுகினார். அதற்கு அவர் தனக்கு லஞ்சமாக ரூ.85 ஆயிரம் கொடுத்தால் தான், பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்க முடியும் என கூறியதாக தெரிகிறது.
அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். அதற்கு பார்த்தசாரதி, ரூ.10 ஆயிரமாவது கொடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பட்டா மாற்றம் செய்து தர முடியாது என கறாராக கூறி விட்டார்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பழகன், இதுபற்றி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர். அதற்காக ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை அன்பழகனிடம் கொடுத்து அனுப்பினர்.
பணத்தை பெற்றுக்கொண்ட அன்பழகன், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரையின்படி கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த பார்த்தசாரதியிடம் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அதனை பார்த்தசாரதி வாங்கியதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார், அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் சோதனை
இந்த நிலையில் கடலூர் விஜயலட்சுமி நகரில் உள்ள பார்த்தசாரதிக்கு சொந்தமான வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சென்றனர். பின்னர் ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா என்றும், லஞ்ச பணம் ஏதும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.