நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் கைது


நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் கைது
x

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த முறைகேடு வழக்கில் கிராமநிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

முறைகேடு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கிராமப்புறங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் விவசாயிகள் அல்லாத வியாபாரிகள் மற்றும் ஏஜெண்டுகளிடமிருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

மேலும் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை வாங்கியதைப் போல உள்ளூர் விவசாயிகளின் பெயரில் போலியாக சிட்டா, அடங்கல் தயாரித்து நெல் கொள்முதல் நிலையங்களில் வேலை செய்யும் அதிகாரிகளின் துணையோடு பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாக புகார் வந்தது.

கிராமநிர்வாக அலுவலர் கைது

அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், தக்கோலம், சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிலரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் ஆற்காடு தாலுகா கத்தியவாடி கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்யும் பாலசுப்பிரமணியன் என்பவரை குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதில் நெல் கொள்முதல் முறைகேட்டில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நெல் கொள்முதல் முறைகேட்டில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story