மே தின கிராம சபை கூட்டம்


மே தின கிராம சபை கூட்டம்
x

தொழிலாளர் தினத்தையொட்டி கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பங்கேற்று பேசினார்.

சேலம்

தொழிலாளர் தினத்தையொட்டி கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பங்கேற்று பேசினார்.

கிராம சபை கூட்டம்

சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்மேகம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கிராம சபை கூட்டங்கள் 6 நாட்கள் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் மே மாதம் 1-ந்தேதி தொழிலாளர் தினத்தையொட்டி சேலம் மாவட்டத்திலுள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்த கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், சுத்தமான குடிநீர் வினியோகம் உறுதி செய்தல், கிராம வளர்ச்சித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

வளர்ச்சி திட்ட பணிகள்

மேலும் ஊராட்சிகளில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், நான் முதல்வன் திட்டம், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக்கருவேல மரம் அகற்றுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் முக்கிய திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது. மேலும், சாலை, குடிநீர், போக்குவரத்து, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் தமிழரசி, ஊராட்சிமன்ற தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story