பழந்தின்னி வவ்வால்களின் சரணாலயமாக காட்சி அளிக்கும் கிராமம்


கபிஸ்தலம் அருகே ஒரு கிராமம் பழந்தின்னி வவ்வால்களின் சரணாலயமாக காட்சி அளிக்கிறது. இங்கு பொதுமக்கள் பட்டாசு கூட வெடிக்காமல் வவ்வால்களை பாதுகாத்து வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே ஒரு கிராமம் பழந்தின்னி வவ்வால்களின் சரணாலயமாக காட்சி அளிக்கிறது. இங்கு பொதுமக்கள் பட்டாசு கூட வெடிக்காமல் வவ்வால்களை பாதுகாத்து வருகிறார்கள்.

அய்யனார் கோவில்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி கிராமம் உள்ளது. இங்கு 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, கரும்பாயிரம் கொண்ட அய்யனார் கோவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த கோவில் வழியாக ஒருவர் மாட்டு வண்டியில் கரும்புகளை ஏற்றி கொண்டு சென்றார். அப்ேபாது அங்கு அய்யனார் சிறு குழந்தை வடிவில் தோன்றி, சாப்பிடுவதற்கு கரும்பு கேட்டார்.

ஆனால் கரும்பு கொண்டு சென்றவர் அதை தர மறுத்ததால், அய்யனார் ஆயிரம் கரும்புகளை பேய்க்கரும்பாக (சுவை இல்லாததாக) மாற்றியதாக கோவிலின் தலவரலாறு கூறுகிறது. அப்போது முதல் இக்கோவில் அய்யனார் கரும்பாயிரம் கொண்ட அய்யனார் என அழைக்கப்பட்டு வருகிறார்.

பழந்தின்னி வவ்வால்கள்

காவிரி ஆற்றின் கரையின் அருகில் இந்த கரும்பாயிரம் கொண்ட அய்யனார் கோவில் அமைந்துள்ளது. எழில் மிகுந்த இந்த பகுதியில் 100 ஆண்டுகளாக பழந்தின்னி வவ்வால்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பக்தர்கள் இந்த பகுதியை வவ்வால் கோவில் பகுதி என்றும் அழைத்து வருகிறார்கள். இளங்கார்குடி கிராமத்தின் எல்லையில் பாம்பு சத்தியம் செய்து கொடுத்ததாக ஒரு ஐதீகம் உள்ளது. இதனால் இந்த கிராமத்தை பொறுத்தவரை இதுவரை பாம்புகடித்து யாரும் உயிர் இழந்ததில்லை என்கிறார்கள்.

பட்டாசு கூட வெடிப்பதில்லை

இந்த கோவிலின் அருகில் வவ்வால்கள் அதிகம் காணப்படுவதால், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வவ்வால்களை பாதுகாக்கும் வகையில் பட்டாசு கூட வெடிப்பதில்லை.

கோவிலை சுற்றி உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் தொங்குவதால் வவ்வால்களின் சரணாலயம்போல இந்த பகுதி காட்சி அளிக்கிறது.


Next Story