சாராய விற்பனையை தடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
திருவாரூர் அருகே சாராய விற்பனையை தடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:-
திருவாரூர் அருகே சாராய விற்பனையை தடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாராய விற்பனை
திருவாரூர் அருகே தென் ஓடாச்சேரி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி தென் ஓடாச்சேரியை சேர்ந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கானூர் பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது சாராய விற்பனையை தடுக்க வேண்டும். சாராயம் விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது சாராயம் விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன் அடிப்படையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாராய விற்பனையை தடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.