கிராம சேவை மையங்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருச்செங்கோடு:
கிராம சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்..
மின்ஆளுமை திட்டம்
தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் கிராம மக்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதை எளிதாக்க மின்ஆளுமை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் வருவாய் துறையினரின் சான்றிதழ்கள், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது, போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் பெற விண்ணப்பிப்பது போன்ற சேவைகள் எளிதில் கிடைத்திட பொதுச்சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. இவை முதலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் மட்டும் செயல்பட்டு வந்தன. பின்னர் பொது சேவை மையங்கள் கூட்டுறவு சங்கங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன.
இதனால் கிராம மக்கள் நகர பகுதிக்கு வந்து சிட்டா, பட்டா போன்றவை பெறுவதற்கு தாசில்தார் அலுவலகங்களில் தவம் இருந்த நிலை தற்போது மாறி உள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான நில சான்றுகளை பொதுச்சேவை மையங்களிலேயே பெற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
கிராம சேவை மையங்கள்
இத்திட்டங்களை மேலும் எளிமையாக்க கிராமங்கள் தோறும் கிராம சேவை மையங்களை அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியில் கிராம சேவை மையங்களுக்கான கட்டிடங்கள் உரிய அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்டன.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளிலும் தலா ரூ.13 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை செலவு செய்து கிராம சேவை மையங்களுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்கள் மூலம், இந்த கிராம சேவை மையங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டது.
ஆனால், கட்டிடங்கள் கட்டப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் ஆன நிலையிலும், இதுவரை கிராம சேவை மையங்கள் மூலம் சான்றிதழ் வழங்கப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் கிராம சேவை மையங்கள் திறக்கப்படவில்லை. அவ்வாறு திறக்கப்பட்டாலும் மகளிர் குழுக்களின் கூட்டம் நடத்தவும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள பொருட்களை போட்டு வைப்பதற்கும் மட்டுமே பயன்பட்டு வருகிறது. சில இடங்களில் இந்த மைய கட்டிடங்கள் தற்காலிக ஊராட்சி மன்ற அலுவலகங்களாகவும் செயல்பட்டு வருகின்றன.
இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி, கிராம சேவை மையங்களை முழுமையாக திறந்து, அவற்றின் மூலம் சான்றிதழ்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.
கூடுதல் கட்டணம்
எலச்சிபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ்:-
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 3 முதல் 5 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒரே இடத்தில் சான்றிதழ் கேட்டு பதிவு செய்வதால், பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் நெட்வொர்க் வேகம் குறைவாக இருப்பதால் கணினியை பயன்படுத்த முடியவில்லை என தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் பணியாளர்கள் கூறி வருகின்றனர்.
அரசு நலத்திட்டங்கள், வருமான சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, பட்டா மாறுதல் என பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெறுவதற்கான ஆவணங்களை பதிவு செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.60 மட்டுமே வசூலிக்கப்படும். ஆனால் அங்கு இணைய வசதி கிடைக்காத காரணத்தால், தனியார் இ-சேவை மையங்களுக்கு சென்று ரூ.200 முதல் ரூ.300 வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை தவிர்க்கும் வகையில் கிராம சேவை மையங்களை சான்றிதழ் வழங்கும் மையமாக மாற்ற வேண்டும்.
அரசின் நோக்கம் நிறைவேறும்
வையப்பமலையை சேர்ந்த தங்கராஜ் :-
கிராம சேவை மையங்கள் என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் இருந்து வருகிறது. எனவே கிராம சேவை மைய கட்டிடத்தில் கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, தனியாக ஒரு நபரை நியமனம் செய்து அனைத்து கிராமங்களிலும் கிராம சேவை மையங்கள் மூலம் அரசின் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அரசின் நோக்கமும் நிறைவேறும். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்.
நாடு விஞ்ஞான ரீதியில் வளர்ந்து வரும், இந்த காலத்தில் கிராமப்புற மக்களுக்கு எளிதில் அனைத்து நலத்திட்டங்களும் கிடைத்திட இந்த கிராம சேவை மையங்கள் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.