கிராம கோவில்களை அரசு கைவசப்படுத்த கூடாதுஇந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி


கிராம கோவில்களை அரசு கைவசப்படுத்த கூடாதுஇந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி
x

கிராம கோவில்களை அரசு கைவசப்படுத்த கூடாது என இந்து முன்னணி மாநில தலைவர் கூறினார்.

கன்னியாகுமரி

தக்கலை,

கிராம கோவில்களை அரசு கைவசப்படுத்த கூடாது என இந்து முன்னணி மாநில தலைவர் கூறினார்.

செயற்குழு கூட்டம்

தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சியில் நேற்று இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா ஹைந்தவ சேவா சங்கம் மூலமாக 86 ஆண்டுகளாக இந்து மக்களின் ஒற்றுமையோடு நடந்து வருகிறது. கோவிலில் தீ விபத்து நடந்த பிறகு பார்க்கப்பட்ட தேவபிரசன்னத்தில், கோவில் தந்திரிகள்தான் சில விசயங்களை முடிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் இதை மீறும் விதமாக ஆகமவிதிகளை மீறி இந்த ஆண்டு கோவில் திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிக்கிறது.

இந்து கோவில்களில் மாற்றுமதத்தினர் வரக்கூடாது என்கிற விதி உள்ளது. அதை இந்து அறநிலையத்துறை கடைபிடிக்கவில்லை. மண்டைக்காடு கோவிலை சுற்றி இருக்கிற கடைகளை மாற்று மதத்தினர் ஏலமிட்டு அதன் வருமானத்தை கொண்டு போகிறார்கள். அதன் வருமானம் பகவதியம்மன் கோவிலுக்குதான் பயன்பட வேண்டும். அடுத்த ஆண்டு இதுபோல் நடந்தால் இந்து முன்னணி போராட்டம் நடத்தும்.

கிராம கோவில்கள்

இதுபோல் பாபநாசம் சொரிமுத்து கோவிலுக்கு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இருந்தே பொதுமக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது வனத்துறை தடை விதித்திருக்கிறது. கிராம கோவில்களை அரசு எடுத்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருக்கிற கோவில்களையே அவர்களால் பராமரிக்க முடியவில்லை. இந்த நிலையில் நல்ல நிலையில் இருக்கிற கிராம கோவில்களை எடுத்தால் அதனால் அரசுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, கிராம கோவில்களை அரசு கைவசப்படுத்த கூடாது. ஆன்லைன் ரம்மியைவிட டாஸ்மாக் மதுவால் தான் அதிமானோர் உயிரிழக்கிறார்கள். ஆகவே அரசு டாஸ்மாக் கடையை முதலில் தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, மாநில குழு உறுப்பினர் சக்திவேலன், கோட்ட தலைவர் தங்க மனோகரன், செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் உடனிருந்தார்.


Next Story