ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் ஓடுவதால் கிராம மக்கள் பாதிப்பு
திருப்பத்தூர் அருகே ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் அருகே ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏரி நிரம்பியது
வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பத்தூர் ஒன்றியம் கலெக்டர் பங்களா அருகே உள்ள பூரிகமாணிமிட்டா ஊராட்சியில் 34 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் பூரிகமாணி மிட்டா ஊராட்சிக்கு செல்லும் சாலை வழியாக முழங்கால் அளவுக்கு ஓடுகிறது. இதனால் அந்த சாலை துண்டிக்கப்பட்டு விட்டது.
இதன்காரணமாக அச்சமங்கலம், அடியத்தூர், கீழூர், உள்பட 10-கற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாததால் அந்தப் பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் ஜெயபுரம் ரோடு, சிவசக்தி நகர் வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து ஊராட்சி ஒன்றியத்திற்கு பலமுறை தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலம் கட்ட வேண்டும்
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்தப் பகுதி வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்திற்கு சென்று வருகிறார்கள். தற்போது சாலையில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்தப்பகுதியில் பாலம் அல்லது ஏரிக்கரையை உயர்த்தி தண்ணீர் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஒன்றியக் குழு உறுப்பினர் லலிதா மோகன்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்கனவே வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திட்ட அலுவலர், உதவி திட்ட அலுவலருக்கு தெரியப்படுத்தியுள்ளோம், விரைவில் சாலை சீரமைக்கப்படும் என தெரிவித்தனர்.