அரசு பள்ளியில் இரவில் கல்வீச்சு, ரத்தக்கறையால் கிராம மக்கள் அச்சம்


அரசு பள்ளியில் இரவில் கல்வீச்சு, ரத்தக்கறையால் கிராம மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடபாதிமங்கலம் அரசு பள்ளியில் இரவில் கல்வீச்சு, ரத்தக்கறை படிந்திருந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

வடபாதிமங்கலம் அரசு பள்ளியில் இரவில் கல்வீச்சு, ரத்தக்கறை படிந்திருந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பள்ளி

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் கடந்த கஜா புயலின் போது இடிந்து விழுந்தது.

சேதமடைந்த சுற்றுச்சுவர் இதுவரை சீரமைக்கப்படவில்லை. சமூக விரோதிகள், சேதமடைந்த சுற்றுச்சுவர் வழியாக புகுந்து மது அருந்துவது உள்ளிட்ட தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்வீச்சு

இந்த சம்பவங்கள் பள்ளி செயல்படும் போதே நடைபெற்று வருவதாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மர்ம நபர்கள், பள்ளி வளாகத்தில் கல்வீசினர். அப்போது, வீசப்பட்ட கற்கள் பள்ளி கதவுகள் மேல் பட்டதில் பயங்கர சத்தம் கேட்டது.இந்த கல்வீச்சு சத்தம் அரைமணி நேரம் வரை கேட்டது. சத்தம் கேட்டு கிராம மக்கள் சிலர் பள்ளி வளாகத்துக்கு சென்றனர்.

ரத்தக்கறை

இதனை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பள்ளி தலைமையாசிரியர் அறை முன்பு உள்ள வெளிப்புறத்தில் ஏராளமான கற்கள் மற்றும் மது பாட்டில்கள், பிரியாணி ஆகியவை சிதறிக்கிடந்தது.

மேலும், அங்கு ரத்தக்கறை அதிகளவில் காணப்பட்டது. இதனால், இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் நடந்தது என்ன? ஒரு தனி நபரை மர்ம நபர்கள் தாக்கினார்களா?அல்லது குடிபோதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டார்களா? என்று கிராம மக்கள் குழப்பம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.அரசு பள்ளி வளாகத்தில் இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.


Next Story