கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்


கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
x

கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே ஆவுடானிக்குளத்தின் பல பகுதிகள் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் செரியலூர் கிராம மக்கள் சார்பில் அன்புச்செல்வன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு, உடனடியாக அளவீடுகள் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாமல் ஆலங்குடி வருவாய்துறையினர் இழுத்தடிப்பதாக செரியலூர் கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும், ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தக் கோரியும் ெசரியலூர், கரம்பக்காடு-இனாம், ஜெமீன் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எதிர்தரப்பினர் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக குறிப்பிட்ட நாட்களுக்கு தடை வாங்கியுள்ளதாகவும், அந்த தடை உத்தரவு முடிந்த உடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுவோம் என்றும் கூறினார். இதனை ஏற்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக்ரஜினி, இன்ஸ்பெக்டர் அழகம்மை, தாசில்தார் செந்தில்நாயகி மற்றும் அன்புச்செல்வன், குழ.சண்முகநாதன் உள்ளிட்டோர் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில், அடுத்த மாதம்(ஜனவரி) 4-ந் தேதி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டதையடுத்து, போராட்டம் கை விடப்பட்டது. போராட்டத்தால் தாசில்தார் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story