ஏற்காட்டில் கிராம மக்கள் சாலை மறியல்


ஏற்காட்டில் கிராம மக்கள் சாலை மறியல்
x

ஏற்காட்டில் சாலை பணியை விரைந்து முடிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

ஏற்காடு:-

ஏற்காட்டில் சாலை பணியை விரைந்து முடிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை சேதம்

ஏற்காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைச்சோலை மலைக்கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன் ஏற்காட்டில் நடந்த கோடை விழாவிற்காக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பழுது பார்க்கப்பட்டு சரிசெய்யப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக ஊராட்சி நிர்வாகம் தலைச்சோலை கிராம சாலையையும் சரி செய்யும் பணி தொடங்கியது. அதன் முதற்கட்ட பணியாக சாலையின் மேற்பகுதியை தோண்டி பெரிய பெரிய ஜல்லிகளை போட்டு சாலையை சமன் செய்யும் பணி நடந்தது. பின்னர் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் சாலை பணியை முடிக்ககோரி ஏற்காடு-குப்பனூர் முக்கிய சாலையில் உள்ள செங்காடு கிராமத்தில் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.

ஆனால் அந்த சாலை இதுவரை சரி செய்யப்படாததால் நேற்று காலை தலைசோலை கிராம மக்கள் தங்களது குழந்தைகளுடன் செங்காடு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் சாலை பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அந்த சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story