ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராவத்தநல்லூரில் ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராவத்தநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவியாக சரண்யா கதிரவன் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சிமன்றத்தலைவியின் கணவரான கதிரவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து இரு தரப்பினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் 5-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காலை 7 மணி அளவில் ராவத்தநல்லூர் பேருந்து நிறுத்தம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி மன்ற தலைவியும், அவரது கணவரும் எங்களை அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கூறினர். அதற்கு போலீசார், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story