மயானத்துக்கு இடம் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்


மயானத்துக்கு இடம் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்
x
தர்மபுரி

பாலக்கோடு:

பஞ்சப்பள்ளி அருகே மயானத்துக்கு இடம் கேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலைமறியல்

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பெரியானூர் கிராமத்தில் அருந்ததியர் காலனி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு தனியாக மயானம் இல்லை. இதனால் இறந்தவர்களை வீட்டுக்கு அருகிலேயே புதைத்தனர். மேலும் கடந்த 30 ஆண்டுகளாக மயானத்துக்கு இடம் கேட்ட அரசிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் 52 வயதான சென்னப்பன் என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாததால் அப்பகுதி மக்கள் தனி மயானம் கேட்டு நேற்று காலை பஞ்சப்பள்ளி - மாரண்டஅள்ளி சாலையில் பெரியானூர் அருகில் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சமரச பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த பாலக்கோடு தாசில்தார் ராஜசேகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இறந்தவர் உடலை இப்போது அடக்கம் செய்யுங்கள். மயானம் தொடர்பான கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.

அதன்பிறகு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் சென்னப்பன் உடலை வீட்டுக்கு அருகிலேயே அடக்கம் செய்தனர். இந்த போராட்டத்தால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தற்காலிகமாக ஒத்திவைப்பு

இந்தநிலையில் போராட்டம் நடத்திய கிராம மக்கள் கூறுகையில், மயானத்துக்கு தாசில்தார் இடம் தருவதாக உறுதி அளித்துள்ளார். அதனால் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். விரையில் மயானத்துக்கு இடம் ஒதுக்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றனர்.


Next Story