வேட்டைநாய்க்கு கோவில் கட்டி வழிபடும் கிராம மக்கள்
கள்ளிமந்தையம் அருகே, ஊர் எல்லையில் நின்று காவல் பணியில் ஈடுபட்ட வேட்டைநாய்க்கு கோவில் கட்டி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
வேட்டைநாய் சாவு
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு முயல் வேட்டையாடுவதற்காகவும், ஊருக்குள் திருட்டை தடுப்பதற்காகவும் வேட்டைநாய் ஒன்றை கிராம மக்கள் வளர்த்தனர். 24 மணி நேரமும் இந்த நாய், கிராமத்தின் எல்லையில் நின்று காவல் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதாவது அடையாளம் தெரியாதவர்கள் யாராவது ஊருக்கு வந்தால், அவர்களை தடுத்து நிறுத்தி விரட்டுவது இந்த நாய் வழக்கமாக வைத்திருக்கிறது. இது யாரையும் கடிக்காமல் தொடர்ந்து குரைத்து கொண்டே இருக்குமாம். அந்த சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் அங்கு வருவார்கள்.
அந்த நபரிடம் உள்ளூர்காரர்கள் விசாரித்து, பின்னர் ஊருக்குள் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். வயது மூப்பு காரணமாக, இந்த நாய் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது.
கோவில் கட்டி கும்பாபிஷேகம்
குடும்பத்தில் ஒருவரை போல பாவித்து வளர்த்து வந்ததால், நாயின் இறப்பை கிராம மக்களால் தாங்க முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் ஊரின் மையப்பகுதியில் நாயின் உடலை வைத்து அஞ்சலி செலுத்தினர். கதறி அழுத பெண்கள் ஒப்பாரி பாடல்கள் பாடி, தாரை-தப்பட்டை முழங்க நாயின் உடலை தேரில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பின்னர் கிராமத்தின் எல்லையான ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் பாறைப்பட்டி பிரிவுக்கு கொண்டு சென்று குழி தோண்டி நாயின் உடலை வைத்து புதைத்தனர். இறந்த மனிதர்களுக்கு நடப்பதை போல அங்கு அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டன. அதன்பிறகு கிராம மக்கள் கூட்டம் போட்டு, தங்களிடம் விசுவாசம் காட்டிய நாய்க்கு சிலை வைத்தனர்.
மேலும் அதன் அருகே சிறிய அளவிலான கருப்பணசாமி சிலையையும் வைத்து, 'வேட்டைக்காரன் கருப்பணசாமி' என்று பெயரிட்டு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். அந்த கோவிலில் கடந்த 40 ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு வந்து கிராம மக்கள் பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
விவசாயம் செழிக்கும்
இது குறித்து கோவில் பூசாரி தண்டபாணி (வயது 65) கூறுகையில், கடந்த 40 வருடங்களுக்கு முன்பு எங்கள் கிராம மக்கள், நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தோம். ஊரின் காவலாளியாக திகழ்ந்த அந்த நாய் இறந்து விட்டது. அதன் உடலை அடக்கம் செய்து விட்டோம். எங்களது முன்னோரின் கனவில் கருப்பணசாமி தோன்றி, நாயை அடக்கம் செய்த இடத்தில் அதே உருவத்தில் சிலை வைத்து கோவில் கட்டி வணங்கினால் விவசாயம் செழிக்கும் என்றும், ஊருக்கு நல்லது நடக்கும் என்று கூறியதால் கோவில் கட்டி வணங்கி வருகிறோம். வெள்ளிக்கிழமை தோறும் அங்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில்ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்று வழிபாடு நடத்துவார்கள் என்றார்.