ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்


ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்
x

பழனி தாலுகா அலுவலகத்துக்கு ரேஷன்கார்டுகளை ஒப்படைக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி நரிக்குறவர் காலனியில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தட்டிக்கேட்டபோது பிரபாகரன் (வயது 30), ரசிகன் (37), மணிகண்டன் (39), பின்னி (38), விஜயேந்திரன் (33), ஷாலினி (22) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தாக்கப்பட்டனர். இவர்களுக்கு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் போதை ஆசாமிகளால் நரிக்குறவர் காலனியை சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றும், இது தொடர்பாக புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி பழனி தாலுகா அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், தங்களது ரேஷன்கார்டு மற்றும் ஆதார் அட்டைகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்போவதாக தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த பழனி போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நரிக்குறவர் காலனியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தகராறில் ஈடுபட்ட சூர்யா (25), முத்து (37) ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story