தனியார் தொழிற்சாலை லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்


தனியார் தொழிற்சாலை லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
x

செந்துறையில், தனியார் தொழிற்சாலை லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர். அதனை விடுவிக்கக்கோரி தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

செந்துறையை அடுத்த நல்லபிச்சன்பட்டியில் தனியார் வெள்ளரிக்காய் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு லாரிகள் மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் தொழிற்சாலைக்கு செல்லும் லாரிகள், நல்லபிச்சன்பட்டி சாலையில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், சாலை சேதமடைந்து வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் இதுதொடர்பாக தனியார் தொழிற்சாலை நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தனியார் தொழிற்சாலைக்கு சென்ற லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர். அப்போது மாற்றுப்பாதையில் தொழிற்சாலைக்கு லாரிகளை இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே லாரி சிறைபிடிக்கப்பட்டது குறித்து அறிந்த தொழிற்சாலை தொழிலாளர்கள் செந்துறையில், நத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் செந்துறை-நத்தம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் லாரியை சிறைபிடித்த கிராம மக்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து கிராம மக்கள் லாரியை விடுவித்தனர்.


Next Story