சகதியான சாலையில் வழுக்கி விழுவதால் தடுப்புகளை வைத்து மூடிய கிராம மக்கள்


சகதியான சாலையில் வழுக்கி விழுவதால் தடுப்புகளை வைத்து மூடிய கிராம மக்கள்
x

கீரமங்கலம்-செரியலூர் இணைப்பு சாலை 20 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்காததால் சகதியான சாலையில் பலர் வழுக்கி விழுந்ததால் தடுப்புகளை வைத்து மூடிய கிராமமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

இணைப்பு சாலை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பின்பக்கம் செரியலூர் இனாம் கிராமத்தின் வழியாக பர்மா காலனி, செரியலூர் ஜெமின், வேம்பங்குடி கிழக்கு ஆகிய பகுதிகளை இணைத்து செல்லும் பிரதான சாலையாக இருந்தது. இந்த சாலை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மெட்டல் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த சாலை பராமரிப்பு இன்றி ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் அந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி வாகனங்கள் மட்டுமின்றி எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எல்லை பிரச்சினை

இந்த சாலை கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் இனாம் ஊராட்சி என இரு ஊர்களுக்குமான இடத்தில் செல்கிறது. அதாவது கீரமங்கலத்தில் பாதியும், செரியலூர் இனாம் கிராமத்தில் பாதியுமாக சாலை செல்வதால் இந்த சாலையை யார்? பராமரிப்பது என்ற எல்லை பிரச்சினை காரணமாக மராமத்து செய்யப்படாமல் உள்ளது.

பல வருடங்களாக மராமத்து செய்யப்படாததால் சாலை உடைந்து கற்கள் பெயர்ந்து, மழைத் தண்ணீர் தேங்கி அடிக்கடி விபத்துகளையும் ஏற்படுத்தி வருகிறது. மழை தண்ணீர் அதிகமாக தேங்கியிருந்த நிலையில் குளத்திலிருந்து மண் கொண்டு வந்து போட்டதால் சேறும், சகதியுமாகி முற்றிலும் போக்குவரத்து முடங்கிய நிலையில் அவசரத்திற்கு அந்த வழியாக சென்ற பலர் வழுக்கி விழுந்துள்ளனர்.

சாலையின் நடுவில் தடுப்பு கட்டைகள்

இந்த சாலையை சீரமைக்க அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில் பல மாதங்களாக சீரமைக்கப்படாததால் நேற்று காலை பர்மா காலனி இளைஞர்கள், கிராம மக்கள் சீரமைக்கப்படாத சேறும் சகதியுமான சாலையில் சென்று விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையின் நடுவில் கல்லுக்கால் நட்டு மரக்கட்டைகளை கட்டி தடுப்புகள் ஏற்படுத்தி சாலையை முடக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்தினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பல வருடங்களாக பராமரிப்பில்லாமல் உள்ள இந்த சாலையில் பயணிக்கும் போது விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் விபத்துகளை தடுக்க தடுப்புகளை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் கூறினார்கள்.

தடுப்புகள் அகற்றப்பட்டது

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், அமைச்சர் உத்தரவையடுத்து சாலை பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக சாலை அளவீடு செய்து மராமத்து பணிகள் செய்வதாக உறுதி அளித்தனர்.

அதன் பிறகு சாலையின் மொத்த பரப்பளவையும் மீட்டு சாலையின் இரு பக்கத்திலும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து சாலை அமைக்க வேண்டும் என்றனர். அதன் பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டது. மதியத்திற்கு மேல் சாலை அளவீடு பணிகள் நடந்துள்ளது. சில நாட்களில் சாலை பணிகள் தொடங்குவதாக கூறப்பட்டது.


Next Story