ஓட்டப்பிடாரம் அருகே கிராம மக்கள் உண்ணாவிரதம்: விளையாட்டு போட்டி ரத்து
ஓட்டப்பிடாரம் அருகே சிறுவர்களுக்கான விைளயாட்டு போட்டியில் இளைஞர்கள் பங்கேற்றதை கண்டித்து, ஒரு பிரிவை சேர்ந்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து விளையாட்டு போட்டி ரத்து செய்யப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே சிறுவர்களுக்கான விைளயாட்டு போட்டியில் இளைஞர்கள் பங்கேற்றதை கண்டித்து, ஒரு பிரிவை சேர்ந்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து விளையாட்டு போட்டி ரத்து செய்யப்பட்டது.
கோவிலை நிர்வகிப்பதில் பிரச்சினை
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்காநாயக்கன்பட்டியில் சுமார் 650 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள், அங்குள்ள கோவிலை நிர்வகிப்பதில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பான விசாரணை கோவில்பட்டி உதவி கலெக்டர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது கோவில் தொடர்பாக யாரும் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பிரிவினர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உயர்நிலைப் பள்ளி முன்பு மாணவர்களுக்கான விளையாட்டு விழாவை 15, 16-ந்தேதிகளில் நடத்த அனுமதி கோரியிருந்தனர்.
உண்ணாவிரதம்
இதை பரிசீலித்த தாசில்தார் நிஷாந்தினி, 15-ந்தேதி மட்டும் விழா நடத்திக் கொள்ள அனுமதி அளித்தார்.
இதையடுத்து அனுமதி பெற்ற பிரிவினர் நேற்று முன்தினம் காலையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தயாராகினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அறிவழகன் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விளையாட்டு போட்டி ரத்து
இந்நிலையில் விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர்களுக்கு பதிலாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், வயதானவர்கள் பங்கேற்றதை அறிந்தனர். இதுகுறித்து எதிர்த்தரப்பினர் புகார் தெரிவித்ததன் பேரில், விளையாட்டுப் போட்டிக்கான அனுமதியானது ரத்து செய்யப்படுவதாக போலீசார் அறிவித்தனர். இதைதொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.