கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கடலையூர் கிராம மக்கள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலையூர் கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் வாறுகால்களை சுத்தம் செய்யாததால் கழிவுநீர் தேங்கி, சுகாதாரக் கேடு, நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதுபற்றி பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளரிடம் புகார் கூறினால், பஞ்சாயத்தில் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். கடலையூர் கிராம பஞ்சாயத்தில் வாறுகால்களை சுத்தம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பின்னர் கோரிக்கை உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் வழங்கினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.