கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
x

கோவில் விழா நடந்த அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

கோவில் விழா நடந்த அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடை

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். சேலம் அருகே எஸ்.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில் எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி ராசிபுரம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்து அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலத்தில் டாஸ்மாக் கடை வைப்பதற்கு சித்தேரிக்காடு, தரவன்காடு, கடுகுக்காரன் காடு உள்ளிட்ட பல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எனவே விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை வைப்பதற்கு அரசு அனுமதி வழங்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

முற்றுகை

தலைவாசல் அருகே சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அங்கு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களில் சிலர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, எங்கள் பகுதியில் உள்ள புத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த கோவில் திருவிழாவை நடத்துவதற்கு உரிய அனுமதியை அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றனர்.

419 மனுக்கள்

ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் கார்மேகத்திடம் கொடுத்துள்ள மனுவில், ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்து செல்ல லாரியை பயன்படுத்த விவசாயிகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 419 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காண சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சத்திய பால கங்காதரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்னன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story