4 பேரை வழிமறித்து தாக்கியவர்களை கைது செய்யக்கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


4 பேரை வழிமறித்து தாக்கியவர்களை கைது செய்யக்கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

4 பேரை வழிமறித்து தாக்கிய அனைவரையும் கைது செய்யக்கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சாத்துக்கூடல் மேல்பாதி காலனியை சேர்ந்தவர்கள் தியாகராஜன் மகன் சிவசங்கர்(வயது 17), கோதண்டம் மகன் ஹரி கிருஷ்ணன்(20). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஆலிச்சிக்குடி வழியாக விருத்தாசலத்துக்கு புறப்பட்டனர். அப்போது ஆலிச்சிக்குடியை சேர்ந்த 7 பேர், அவர்களை வழிமறித்து திட்டி தாக்கியுள்ளனர்.

இதை தட்டிக்கேட்ட மேல்பாதி காலனியைச் சேர்ந்த சாமிதுரை மகன் சீனு என்கிற அறிவுடைநம்பி (25), தவமணி மகன் தனுஷ் என்கிற பாலமுருகன் (18) ஆகியோருக்கும் அடி விழுந்தது. இதில் காயமடைந்த 4 பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் பரமசிவம்(22), மணிகண்டன்(24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் சாத்துக்கூடல் மேல்பாதியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று மதியம் ஒன்று திரண்டு விருத்தாசலம் பாலக்கரைக்கு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் அய்யாயிரம், மாநில துணை செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய பொருளாளர் சக்திவேல், ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கர், அய்யாதுரை, தென்றல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், மேல்பாதி பகுதியைச் சேர்ந்த 4 பேரை தாக்கிய 7 பேரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதல் தவணை தொகையை உடனே வழங்க வேண்டும், ஆலிச்சிக்குடி மற்றும் க.இளமங்கலம் பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை போலைீசார் ரோந்துப்பணி மேற்கொள்ள வேண்டும், கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதால் அதனை கண்டறிந்து முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

முற்றுகை

பின்னர் அனைவரும் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சப்-கலெக்டர் பழனி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சப்-கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story