இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருேக கானூர் கிராமத்தில் சமயகருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் மூலஸ்தானமே காளை உருவத்தில் உள்ளது. இங்கு கிராம மக்கள் சார்பில் 2 கோவில் காளைகள் வாங்கப்பட்டது. அதில் பெரியவர் என்ற காளை பெரிய சமயகருப்பு சாமியும், சின்னவர் என்ற சிறிய சமயகருப்பு சாமி காளை ஆகும். கிராம மக்கள் இந்த காளைகளை பெரியவர், சின்னவர் என்று செல்லமாக அழைத்தனர்.இதில், பெரியவர் என்ற காளை பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக பெரியவர் காளை நேற்று முன்தினம் மாலை இறந்தது. இதையடுத்து இறந்த காளைக்கு மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு ஊர் மந்தையில் வைத்து கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் கிராம மக்கள் சார்பில் இறந்த காளைக்கு விளம்பர பதாகை வைத்தனர். நேற்று மாலை டிராக்டரின் பின்புறத்தில் காளையின் உடல் வைக்கப்பட்டு கிராம பெரியவர்கள் தலைமையில் ஊர்வலம் சென்றது. ஊர்வலத்தின் முன்னே கரகாட்டம், தப்பாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பின்னர் சமய கருப்பசாமி கோவில் அருகே குழி தோண்டி காளை அடக்கம் செய்யப்பட்டது.