இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் மனு


இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, உதவி கலெக்டர் பிரியங்கா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 260 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

மேலும் 51 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஒரு மாற்றுத்திறனாளிக்கு நவீன ஊன்றுகோல் மற்றும் கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி பெற்று அரசு போட்டி தேர்வுகளில் வெற்றிபெற்ற 3 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

இலவச வீட்டுமனை

இதற்கிடையே அய்யலூரை அடுத்த கிணத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 30 பேர் இலவச வீட்டுமனை கேட்டு மனு கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். மேலும் சொந்த வீடு இல்லாததால் சாலை ஓரத்தில் கொட்டகை அமைத்தும், வாடகை வீடுகளிலும் வசிக்கிறோம். எனவே நாங்கள் வீடு கட்டி வசிக்க அரசு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், என்றனர்.

அதேபோல் குட்டத்துபட்டி அருகேயுள்ள காலாடிபட்டியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்திய பொதுபாதையை சிலர் அடைத்து விட்டதாக கூறி, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.


Next Story