நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி கிராமமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி கிராமமக்கள் மனு அளித்தனர்.
கரூர்,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் 195 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 47 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் ஒருவருக்கு திறன்பேசி, ஒருவருக்கு பேட்டரி வீல் சேர் மற்றும் 7 பேருக்கு தையல் எந்திரமும், ஒருவருக்கு மூன்று சக்கரவண்டி, 5 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் வருவாய்த்துறை மூலம் 3 பேருக்கு ஆதரவற்ற விதவைக்களுக்கான சான்றிதழ் என மொத்தம் 18 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பஸ்சை இயக்க வேண்டும்
இக்கூட்டத்தில் கரூர் பெரியாண்டாங்கோவில் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- பெரியாண்டாங்கோவில் கிராம மக்களாகிய நாங்கள் அரசு பஸ்சின் வருகை நிறுத்தப்பட்டதால் மிகுந்த வேதனை அடைகிறோம். இங்கு சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வசித்து வருகிறோம். இவர்கள் அன்றாடம் பள்ளி மற்றும் வேலைக்கு சென்றுவர வேண்டி உள்ளது. ஆகையால் மதியம் 1.45 மணி, மாலை 5.50 மணி, இரவு 7.30 மணிக்கு நிறுத்தப்பட்ட கரூரில் இருந்து வரக்கூடிய பஸ்சும், மதியம் 2.30 மணிக்கு ஊர் வழியாக கரூர் செல்லும் பஸ்சும் மீண்டும் அதன் பயணத்தை தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.