கொள்ளிடம் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு


கொள்ளிடம் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை கொட்ட வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குப்பை கொட்ட வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

ஆற்றின் கரையில் கொட்டப்படும் குப்பைகள்

கொள்ளிடம் சோதனைசாவடி அருகே ெரயில்வே பாலத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றின் கரையில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் குப்பைகளுடன் கோழி இறைச்சி கழிவுகள், இறந்த ஆடு, மாடுகள் போடப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக இந்த வழியாக சந்தபடுகை, திட்டு படுகை, நாதல்படுகை, முதலைமேடு திட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

மாசடையும் தண்ணீர்

கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் கரையில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் அடித்து செல்லப்பட்டு கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் கலந்து வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்று தண்ணீர் மாசு அடைந்து, அதில் குளிப்பவர்களுக்கு அரிப்பு ஏற்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குடிக்கும் கால்நடைகள் நோய் வாய்படுகின்றன.இதுகுறித்து கிராமமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஒவ்வொரு ஊராட்சியிலும் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான தூய்மை பணியாளர்கள் பணியில் இருந்து வருகின்ற நிலையில் குப்பைகள் ஊராட்சி பகுதியில் தனிப்பட்ட ஒரு இடத்தில் கொட்டப்படாமல் கொள்ளிடம் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

கிராம மக்கள் எதிர்ப்பு

கொள்ளிடம் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தப்படுகை கிராமத்தைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் வாசு தலைமையில் அந்த பகுதி வாலிபர்கள் அங்கு குவிந்தனர். அப்போது அங்கு குப்பையை கொட்ட வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்மொழி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நேசமணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குப்பைகள் கொட்ட வேறு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்று விட்டனர்.


Next Story