உசிலம்பட்டி அருகே மீன்பிடி குத்தகைக்கு கண்மாயை ஏலம் விட எதிர்ப்பு -பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


உசிலம்பட்டி அருகே மீன்பிடி குத்தகைக்கு கண்மாயை ஏலம் விட எதிர்ப்பு  -பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x

உசிலம்பட்டி அருகே கண்மாயை மீன்பிடி குத்தகைக்கு ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே கண்மாயை மீன்பிடி குத்தகைக்கு ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

மீன்பிடி குத்தகை

உசிலம்பட்டி அருகே உள்ளது முதலைக்குளம். இந்த ஊரில் உள்ள பெரியகண்மாயில் கம்பம் காமாட்சி பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முதல் முதலைக்குளம் கண்மாயும் மீன் குத்தகைக்காக அரசு ஏலம் விடுவதாக அறிவித்தது.

இதை அறிந்த முதலைக்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழப்பட்டி, எலுவம்பட்டி உள்பட 8 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் லாரி, ஆட்டோ போன்ற வாகனங்களில் வந்து மதுரை-தேனி சாலையில் உள்ள குப்பனம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறும்போது, ஆண்டாண்டு காலமாக கம்பம் காமாட்சி பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மீன்பிடி திருவிழா நடத்தி வந்துள்ளோம். இந்த மீன்பிடி திருவிழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தில் உள்ள ஏராளமான மக்கள் வந்து கலந்து கொண்டு மீன்களை பிடித்து செல்வது வழக்கம். எனவே இந்த கண்மாயை ஏலம் விடக்கூடாது என்றனர். இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் உறுதி

பேச்சுவார்த்தையில் முதலைக்குளம் கண்மாயின் ஏலத்தை நிறுத்தி வைப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நிரந்தரமாக இந்த கண்மாயில் மீன் குத்தகைக்கு விடக்கூடாது என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலெக்டரிடம் பேசி நிரந்தரமாக இந்த கண்மாயை மீன் குத்தகைக்கு விடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தின் போது மதுரை-தேனி சாலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி பகுதியில் உள்ள சுமார் 17 கண்மாய்கள் மீன் குத்தகைக்காக ஏலம் விடுவதைத் தொடர்ந்து உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story