சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல்


சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல்
x

ஏற்காடு அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

ஏற்காடு:

ஏற்காடு அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டும்-குழியுமான சாலை

ஏற்காட்டில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் தலைச்சோலை. இந்த கிராமத்துக்கு செல்லும் சாலைகள் குண்டும்-குழியுமாக சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் தலைச்சோலை கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச்ெசன்றார். அப்போது குண்டும்-குழியுமான சாலையில் மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறி, கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டோர் ஏற்காடு-குப்பனூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி, ஒருவாரத்தில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கிராம மக்களின் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை 2 மணி நேரம் ஏற்காடு-குப்பனூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story