3-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்
எட்டயபுரம் அருகே குடியிருப்பு பகுதி வழியாக காற்றாலை உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே குடியிருப்பு பகுதி வழியாக காற்றாலை உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3-வது நாளாக போராட்டம்
எட்டயபுரம் அருகே உள்ள க.குமரெட்டையாபுரம் கிராமத்தைச் சுற்றிலும் தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மக்கள் குடியிருக்கும் பகுதி வழியாக உயர் அழுத்த மின்கம்பங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 9-ந் தேதி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் தனியார் காற்றாலை நிறுவனத்தின் வாகனங்களை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3-வது நாளாக க.குமரெட்டையாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கிராம மக்கள், மாணவ-மாணவிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளை, உதவி கலெக்டர் ஆய்வு
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கே.குமரெட்டையாபுரத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி நாளை (திங்கட்கிழமை) ஆய்வு நடத்தி, மாற்றுப்பாதை வழியாக காற்றாலை மின்கம்பங்கள் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற கிராம மக்கள், குடியிருப்பு பகுதி வழியாக மின்கம்பங்கள் அமைப்பதை கைவிடும் வரையிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.