நத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


நத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x

நத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

நத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம்

நத்தம் அருகே கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது, க.பங்களா கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக க.பங்களா கிராமத்தில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து க.பங்களா கிராம மக்கள் ஏராளமானோர் நேற்று காலை கணவாய்பட்டியில், திண்டுக்கல்-நத்தம் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு காலிக்குடங்களுடன் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலர் வெற்றிவேந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் திண்டுக்கல்-நத்தம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story