மழை வேண்டி அரச மரம்-வேப்பமரத்துக்கு திருமணம் நடத்திய கிராம மக்கள்; மழை வேண்டி வினோத வழிபாடு
வேடசந்தூர் அருகே மழை வேண்டி அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் கிராம மக்கள் திருமணம் நடத்தி வினோத வழிபாடு செய்தனர்.
வேடசந்தூர் அருகே மழை வேண்டி அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் கிராம மக்கள் திருமணம் நடத்தி வினோத வழிபாடு செய்தனர்.
மரங்களுக்கு திருமணம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குரியாண்டிகுளம் கிராமத்தில் பிரசித்திபெற்ற வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் பூசாரி அரச மரக்கன்றை நட்டு வைத்து, பராமரித்து வந்தார். சில நாட்களில் அரச மரக்கன்றின் அருகிலேயே வேப்ப மரக்கன்றும் தானாக வளர்ந்தது. நாளடைவில் அந்த 2 மரங்களும் ஒன்றாக பின்னிப்பிணைந்து வளர்ந்தது. இதையடுத்து 2 மரங்களையும் கிராம மக்கள் தெய்வங்களாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்தி வழிபாடு செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. பின்னர் அந்த அழைப்பிதழ் கிராம மக்களுக்கு வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது.
வினோத வழிபாடு
இதற்கிடையே இன்று சுபமுகூர்த்த நாளில் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்தப்பட்டது. முன்னதாக அரச மரத்துக்கு பட்டு வேட்டியும், வேப்ப மரத்துக்கு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமண சடங்குகள் நடந்தன. மேலும் 2 மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க, கிராம மக்கள் புடைசூழ அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் நடந்தது. அப்போது கோவில் பூசாரி, வேப்பமரத்துக்கு தாலி கட்டி திருமணத்தை நடத்தி வைத்தார். இதில், கிராம மக்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
முடிவில் இந்த வினோத வழிபாட்டிற்கு வந்திருந்தவர்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்து நடந்தது குறிப்பிடத்தக்கது.