போலீஸ் நிலையம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்


போலீஸ் நிலையம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
x

தக்கோலத்தில் வாலிபரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராமமக்கள் போலீஸ் நிலையம் அருகே திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்

ராணிப்பேட்டை

தற்கொலை

அரக்கோணத்தை அடுத்த நகரி குப்பம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் தீபக் (வயது 18). பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் விக்கி. இவர் தீபக் உடன் பழகுவதை, அவரது தந்தை ஜெயவேலு கண்டித்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று தீபக், விக்கி ஆகிய இருவரும் ஒன்றாக இருப்பதை கண்ட விக்கியின் பெரியம்மா அமுலு இது குறித்து ஜெயவேலிடம் தெரிவித்துள்ளார்.

உடனே ஜெயவேல் மகன் விக்கியை கண்டிக்காமல் தீபக்கை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் தீபக் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தீபக்கின் தந்தை சுரேஷ் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

சாலை மறியல்

இந்த நிலையில் தற்கொலைக்கு காரணமான ஜெயவேலு மற்றும் அமுலுவை போலீசார் விரைந்து கைது செய்யவில்லை எனக் கூறி நகரி குப்பம் கிராம மக்கள் தக்கோலம் போலீஸ் நிலையம் அருகே பூந்தமல்லி - அரக்கோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story