கொள்ளிடம் கரையோர பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் தீவுகளாக மாறிய கிராமங்கள்


கொள்ளிடம் கரையோர பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் தீவுகளாக மாறிய கிராமங்கள்
x

சிதம்பரம் அருகே கொள்ளிட கரையோர பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்ததால் கிராமங்கள் தீவுகளாக காட்சி அளித்தன. இதானல் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தஞ்சம் புகுந்தனர்.

கடலூர்

அண்ணாமலைநகர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த சில தினங்களாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த உபரி நீர் கல்லணை, கீழணை வழியாக சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் கலக்கிறது.

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

தீவுகளாக மாறிய கிராமங்கள்

சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிட கரையோர கிராமங்களையும் வெள்ளநீர் சூழ்ந்ததால் அவை தீவுகளை போன்று காட்சி அளித்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் பரிதவித்தனர். குறிப்பாக பெராம்பட்டு, கீழக்குண்டலப்பாடி, திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், வீரன்கோவில் திட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது‌.

மிகவும் தாழ்வான பகுதி என்பதால் இங்குள்ள மக்கள் மூட்டை, முடிசுக்களுடன் பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

5-வது முறையாக

இ்ந்த ஆண்டில் 5-வது முறையாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்து இருப்பதாகவும் தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்து இருப்பது மிகவும் வேதனையாக இருப்பதாக கவலை தெரிவித்த கிராமமக்கள் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுவதை தடுக்க நிரந்தர தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் இது பற்றிய தகவல் அறிந்த கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொள்ளிட கரையோர பகுதிக்கு விரைந்து சென்று வெள்ளம் சூழ்ந்த பெராம்பட்டு, திட்டுக்காட்டூர் பகுதிகளை நேரில் பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து சின்னகாரமேடு பகுதியில் கொள்ளிடக் கரையில் கற்களை கொட்டி கரை பலப்படுத்தப்பட்டுள்ளதை அவர் ஆய்வு செய்தார். அப்போது சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஹரிதாஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகரன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், முத்துக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

2 லட்சம் கன அடி தண்ணீர்

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் திட்டுக்காட்டூர், ஜெயங்கொண்டப்பட்டினம், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் ஆகிய பகுதிகள் தீவுகளாக மாறி உள்ளன. இங்குள்ள மக்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து தேவையான உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை (இன்று) இப்பகுதிகளில் தண்ணீர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தண்ணீர் அதிக அளவில் வரும் பொழுது மக்கள் ஆற்றில் இறங்க கூடாது என்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கிய பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு 150 ஹெக்டேர் நிலங்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.


Next Story