விழுப்புரம் மாவட்டத்தில்பள்ளி செல்லாமல் இடைநின்ற 19,631 குழந்தைகள் மீண்டும் கல்வி கற்க நடவடிக்கைகலெக்டர் மோகன் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி செல்லாமல் இடைநின்ற 19,631 குழந்தைகள் மீண்டும் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வருகையை 100 சதவீதம் உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வராமல் இருக்கும் குழந்தைகள், 8-ம் வகுப்பு முடிக்காமல் இடைநிற்கும் குழந்தைகள், பள்ளியே செல்லாத குழந்தைகள் ஆகியோரை பள்ளி செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகள் என கருதப்படுவார்கள்.
19,631 குழந்தைகள்
விழுப்புரம் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 19,631 குழந்தைகள் பள்ளி செல்லா குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களை கண்டறிந்து பள்ளிகள், சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க வட்டார வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் உதவி திட்ட அலுவலர், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர், உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மூலம் தொழிற்சாலைகள், குடிசைப்பகுதிகள், மலைப்பகுதிகள், பஸ் நிலையங்கள், சந்தைகள் போன்ற இடங்களில் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க 105 வட்டார வள மைய ஆசிரியர்கள் பயிற்றுனர்கள், 1,409 தலைமையாசிரியர்கள், 7,393 ஆசிரியர்கள் என மொத்தம் 8,907 கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் சேர்க்கை விவரங்கள் குறித்து TN-SED-SCHOOLS என்ற செயலியில் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இடைநின்ற குழந்தைகள் மாறுதலாகி சென்ற குழந்தைகளின் விவரங்களை EMIS தரவுத்தளத்தில் பொது தகவலின் பதிவேற்றம் செய்ய வேண்டும். கணக்கெடுப்பு பணியின்போது சிறப்பு கவனம் செலுத்தி பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இக்கணக்கெடுப்பு களப்பணியை வருகிற 11.1.2023-க்குள் முடித்திட வேண்டும். கணக்கெடுப்பு சார்ந்த இப்பணிகளை இடம் குறித்த தகவலுடன் புகைப்படங்களாக எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் காஞ்சனா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.