விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்


விழுப்புரம் மாவட்டத்தில்  வேளாண்மை கணக்கெடுப்பு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வழிகாட்டுதலின்படி 1970- 71-ம் ஆண்டு முதல் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 10 வேளாண்மை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று இந்திய வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூலம் இந்தியா முழுவதும் 11-வது வேளாண் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் வகுக்கப்படும். வேளாண் கணக்கெடுப்பு என்பது ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து நில சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவு எண்களில் உள்ள விவரங்களை சேகரிப்பதாகும்.

இந்த 11-வது கணக்கெடுப்பு பணி செல்போன் செயலி மூலமாக காகித பயன்பாடு இல்லாமலும், குறைந்த காலத்திற்குள்ளாக தரமான விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த கணக்கெடுப்பில் களப்பணியாளர்களாக கிராம நிர்வாக அலுவலர்களும், மேற்பார்வையாளர்களாக சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்களும், வட்ட கணக்கெடுப்பு அலுவலர்களாக அந்தந்த தாசில்தார்களும், கோட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்களாக உதவி கலெக்டர்கள், கோட்டாட்சியர்களும், மாவட்ட வேளாண் கணக்கெடுப்பு அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலரும் நியமிக்கப்பட்டு பணி நடைபெற உள்ளது. எனவே அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியின் முக்கியத்துவம் கருதி ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, வேளாண்மை துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சண்முகம், புள்ளியியல் துணை இயக்குனர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story