விழுப்புரம் அரசு கல்லூரியில் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்


விழுப்புரம் அரசு கல்லூரியில் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்
x

மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக கூறி விழுப்புரம் அரசு கல்லூரியில் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி நேர்காணல் மூலம் தொடங்கியது. அதன் பின்பு 4 முறை மாணவர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டபோதிலும் தகுதியான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படாமல் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டதாக பெற்றோர்கள் தரப்பில் புகார் எழுந்தது.

இந்நிலையில் மாணவர் சேர்க்கையை முறைகேடாக நடத்தியதாக கூறி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நேற்று கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள் சிலர் தங்களுடைய பெற்றோர்களுடன் கல்லூரி முதல்வர் அறைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசாரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த மாணவர்களும், பெற்றோர்களும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த திடீர் போராட்டத்தினால் அக்கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story