விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணி விரைவுப்படுத்தப்படுமா?


விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணி விரைவுப்படுத்தப்படுமா?
x

கடலூரில் ஆமை வேகத்தில் பாலம் கட்டுமான பணி நடக்கிறது. விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடலூர்

கடலூர்:

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 194 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற, சுமார் ரூ.6,431 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு மத்திய அரசு கடந்த அனுமதி அளித்தது. அதாவது இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் கூட்டுசாலையில் இருந்து தொடங்குகிறது.

இந்த திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது.

சாலை அமைக்கும் பணி

இந்த சாலை விழுப்புரம், வளவனுார், கண்டமங்கலம், எம்.என்.குப்பம், பாகூர், கடலூர் நகரில் புறநகர் பகுதி வழியாக சென்று கடலூர் முதுநகர் அருகில் உள்ள குடிகாடு அருகே சிதம்பரம் சாலையில் இணைகிறது. பின்னர் அங்கிருந்து ஆலப்பாக்கம், பெரியபட்டு, புதுச்சத்திரம், கொத்தட்டை, பி.முட்லூர், சி.முட்லூர் புறவழிச்சாலையில் கீழமூங்கிலடி அருகே வலது பக்கமாக பிரிந்து, பாசிமுத்தான் ஓடையை கடந்து மணலூர் அருகே சீர்காழி செல்லும் புறவழிச்சாலையை சென்றடைகிறது.

இதையடுத்து கடலூர் குடிகாட்டில் இருந்து சிதம்பரம் வரையிலான 52 கி.மீ. தூர சாலை பணிக்காக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சாலை 45 மீட்டர் அகல சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் இருந்து ராமாபுரம் வரை சாலை அமைக்கும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

மந்தகதியில் பணிகள்

மேலும் கடலூர் பாதிரிக்குப்பம்-திருவந்திபுரம் சாலையின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக சாலையின் இருபுறமும் மண் கொட்டி, ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சிமெண்டு சிலாப்புகள் மூலம் பாலம் எழுப்பும் பணியை தொடங்கினா். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் பாதி பணிகள் கூட முடிவடையவில்லை. மந்தகதியிலேயே பணிகள் நடக்கிறது.

இதனால் மேலும் பாதிாிக்குப்பம்-திருவந்திபுரம் சாலையில் மணல் பரவி கிடப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா். மேலும் இந்த பாலம் பாதிரிக்குப்பத்தில் இருந்து ராமாபுரம் வரை அமைக்கப்பட உள்ளதால், ராமாபுரம் பகுதி வரை மணல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், நகர் பகுதிக்கு வருவதற்குள் தினசாி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா். அதனால் ஆமை வேக பணியை துரிதப்படுத்தவும், 4 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story