மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க விழுப்புரம் வீரர்கள் பயணம்


மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க விழுப்புரம் வீரர்கள் பயணம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெறும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க புறப்பட்ட விழுப்புரம் வீரர்களை அமைச்சர் பொன்முடி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் 30.6.2023 (இன்று) முதல் 24.7.2023 11 நாட்கள் வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் நேற்று சென்னைக்கு புறப்பட்டனர்.

மாவட்ட அணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலம்பாட்டம் விளையாட்டு போட்டிக்கு 22 வீரர், வீராங்கனைகளும், கபடி போட்டிக்கு 24 பேரும், கைப்பந்து போட்டிக்கு 24 பேரும் என மொத்தம் 70 பேர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க விழுப்புரத்தில் இருந்து பஸ் மூலம் புறப்பட்டனர். இவர்களுடன் 8 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களும் சென்றனர்.

அமைச்சர் வழியனுப்பி வைத்தார்

இந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு இலவச சீருடையுடன் பயணப்படியையும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர்கள் சென்ற பஸ்சை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட கலெக்டர் பழனி, நா.புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், விளையாட்டு அணி மேலாளர்கள் சவுந்தர்ராஜன், கம்பன், ஜான்சன், சோபியா, ஹரிதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story