மத்தியபிரதேசத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் விழுப்புரம் மாணவி தங்கப்பதக்கம்


மத்தியபிரதேசத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் விழுப்புரம் மாணவி தங்கப்பதக்கம்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்தியபிரதேசத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் விழுப்புரம் மாணவி தங்கப்பதக்கம் பெற்றாா்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள சாலைஅகரம் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வரும் ராஜரத்தினம்- பூங்கொடி தம்பதியினரின் மகள் சுபஸ்ரீ. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவியான சுபஸ்ரீ, ஓட்டப்பந்தய வீராங்கனையாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்று வருகிறார். மத்திய பிரதேசத்தில் கடந்த 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் தேசிய அளவில் நடைபெற்ற காது கேளாதோர், வாய் பேச முடியாதோர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தது. இதில் ஓட்டப்பந்தய போட்டியில் தமிழகத்தின் சார்பில் விழுப்புரம் மாணவி சுபஸ்ரீ கலந்துகொண்டார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவி சுபஸ்ரீ, தனது திறமையாலும், உத்வேகத்தினாலும் சீறிப்பாய்ந்து ஓடி அந்த இலக்கை ஒரு நிமிடம் 2 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இப்போட்டியில் சுபஸ்ரீ, முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதேபோன்று அவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-ம் இடமும், நீளம் தாண்டுதலில் 3-ம் இடமும் வென்று அசத்தினார். இதனை தொடர்ந்து அவர், மத்திய பிரதேசத்திலிருந்து ரெயில் மூலம் புறப்பட்டு நேற்று விழுப்புரம் வந்தார். மாணவி சுபஸ்ரீக்கு அவரது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story