பட்டா வழங்கக்கோரி விழுப்புரம் தாலுகா அலுவலகத்தை பழங்குடி இருளர்கள் முற்றுகை அரசு ஆவணங்களை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு


பட்டா வழங்கக்கோரி விழுப்புரம் தாலுகா அலுவலகத்தை பழங்குடி இருளர்கள் முற்றுகை அரசு ஆவணங்களை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பட்டா வழங்கக்கோரி விழுப்புரம் தாலுகா அலுவலகத்தை பழங்குடி இருளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், அரசு ஆவணங்களை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில் பில்லூர் செல்லும் பாதையில் பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்த 25 குடும்பத்தினர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பத்தினருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 19 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்படவில்லை.

இவர்கள், தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் பட்டா வழங்க எந்தவொரு அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சூழலில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வருவாய்த்துறையினர், அப்பகுதிக்கு நேரில் வந்து பாட்டை புறம்போக்கு இடத்தை தேர்வு செய்து 19 பேருக்கான மனைகளை அளவீடு செய்தனர். ஆனால் அதோடு சரி, இதுநாள் வரை பட்டா கிடைக்கவில்லை. இதுபற்றி அப்பகுதி மக்கள், பலமுறை அதிகாரிகளிடம் சென்று முறையிட்டும் எந்தவித பயனும் இல்லை.

தாலுகா அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று காலை தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு ரேஷன் கார்டு, நூறு நாள் வேலை திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்து விழுப்புரம் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும், தங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

அரசு ஆவணங்களை ஒப்படைக்க முயற்சி

மேலும் அவர்கள், தங்களுடைய அரசு ஆவணங்களை அங்கிருந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்க முயன்றனர். உடனே அவர்களிடம் தாசில்தார் வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட இடத்தை மீண்டும் அளவீடு செய்து பட்டா வழங்க விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பிறகு அவர்கள், அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தால் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story