விநாயகர் கோவில் இடிப்பு
விநாயகர் கோவில் இடிப்பு
ஊத்துக்குளி
ஊத்துக்குளி அருகே அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் கட்டப்பட்டிருந்த விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
விநாயகர் கோவில்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.பெரியபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விநாயகர் கோவிலை கட்டி அப்பகுதி பொது மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, விநாயகர் கோவிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து பொது இடத்தில் கட்டப்பட்டிருந்த விநாயகர் கோவிலை நேற்று காலை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். மேலும் அங்கிருந்த விநாயகர் சிலையையும் எடுத்துச் சென்றனர்.
இதை அறிந்த இந்து முன்னணி கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் தலைமையில் இந்து முன்னணியினர் எஸ்.பெரியபாளையம் பஸ் நிறுத்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் கோவில் இடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியும், கோவிலில் இருந்து அகற்றப்பட்ட விநாயகர் சிலையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
50 பேர் கைது
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஊத்துக்குளி தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பு விநாயகர் சிலை ஒப்படைக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார். இதை இந்து முன்னணியினர் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு கருதி 300-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.