மதுரை புறநகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமீறல்; 223 பேர் மீது வழக்கு
மதுரை புறநகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்ட 223 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை புறநகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்ட 223 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
வாகன தணிக்கை
புத்தாண்டு பண்டிகையை யொட்டி மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மதுரை மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி, சிலைமான், பெருங்குடி, உசிலம்பட்டி, கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
223 ேபர் மீது வழக்கு
அப்போது, காவல்துறையினரின் எச்சரிக்கைகளை மீறியும், போக்குவரத்து விதிகளை மீறியும் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிசென்றது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, தலைக்கவசம் அணியாதது, 3 பேர் மோட்டார் சைக்கிள்களில் சென்றது போன்ற போக்குவரத்து விதிகளை மீறியதாக புறநகரில் 223 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகர காவல்துறை எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவித விதிமீறல்களும் இல்லாத நிலையில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.