போக்குவரத்து விதி மீறல்; 44 வாகனங்கள் பறிமுதல்


போக்குவரத்து விதி மீறல்; 44 வாகனங்கள் பறிமுதல்
x

நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் பகுதிகளில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 44 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.

நாமக்கல்

வாகன சோதனை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அதன் பகுதி அலுவலகமான பரமத்திவேலூர் எலைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி மற்றும் குழுவினர் பல்வேறு இடங்களில் தொடர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் 1,225 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் 281 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் வரி செலுத்தாதது மற்றும் இதர குற்றங்களுக்காக 85 வாகனங்களுக்கு வரி ரூ.3 லட்சத்து 73 ஆயிரத்து 500 மற்றும் அபராதம் ரூ.3 லட்சத்து 91 ஆயிரத்து 200 விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. மேலும் 196 வாகனங்களுக்கு ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 200 அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தமாக வரி மற்றும் அபராதம் மூலமாக மொத்தம் ரூ.14 லட்சத்து 21 ஆயிரத்து 900 அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

44 வாகனங்கள் பறிமுதல்

மேலும் தகுதிச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுனர் உரிமம் போன்றவை நடப்பில் இல்லாமலும், உரிய சாலை வரி செலுத்தாமலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 44 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல் சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தியது தொடர்பாக 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதுதவிர அதிகவேகம், அதிக பாரம், அதிக உயரம், ஹெல்மெட் அணியாதது, வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகித்தல், சீட்பெல்ட் அணியாதது, சிக்னல்களை முந்துதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக 41 ஓட்டுனர்களின் உரிமம் தற்காலிகமாக தகுதி இழப்பு செய்யப்பட்டு உள்ளன.

இதுபோல் சட்டத்திற்கு புறம்பாக வாகனங்கள் இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story