எடை மேடையில் விதிமீறல்


எடை மேடையில் விதிமீறல்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லையில் விதிமுறைகளை மீறி எடை மேடை அமைத்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் ஆர்.டி.ஓ.விடம் கனரக வாகன டிரைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

தமிழக-கேரள எல்லையில் விதிமுறைகளை மீறி எடை மேடை அமைத்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் ஆர்.டி.ஓ.விடம் கனரக வாகன டிரைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எடை மேடை

கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லாவிடம், சிறு கனரக வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் புகார் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கூடலூரில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு நீண்ட காலமாக மலை காய்கறிகளை வாகனங்களில் கொண்டு சென்று வருகிறோம். இந்த நிலையில் சிலர் தூண்டுதலின் பேரில், கேரளாவில் உள்ள எடை மேடையை குத்தகைக்கு எடுத்து தமிழக-கேரள எல்லையில் மோட்டார் வாகன துறையினர் விதிமுறைகளை மீறி அமைத்து உள்ளனர்.

தொடர்ந்து சரக்குகளுடன் வரும் வாகனங்களை உள்நோக்கத்துடன் கூடுதல் எடை உள்ளது என கூறி ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் அபராதம் வசூலிக்கும் ஒப்புதல் சீட்டில் கையெழுத்தும் பெறுவதில்லை. இதனால் விதிமுறைகளை மீறி செயல்படும் எடை மேடை அமைத்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து சிறு கனரக வாகன டிரைவர்கள் கூறும்போது, விதிமுறைகளை மீறி செயல்படும் எடை மேடை குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆர்.டி.ஓ. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். வருகிற 22-ந் தேதி வட்டார போக்குவரத்து துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்து உள்ளார் என்றனர்.

முன்னதாக கூடலூர் சிறு கனரக வாகன டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க கூட்டம் கூடலூரில் நடைபெற்றது. இதில் விதிமுறைகளை மீறி செயல்படும் எடை மேடை அமைத்த வர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story